politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

31.8.11

கீச்சு #4

பிள்ளையார் சிலைகளை பெரியார் உடைத்ததற்கு கண்டனம் சொல்லியவர்கள் மூன்று நாட்கள் கழித்து அதை தான் செய்ய போகிறார்கள்...

செப்டம்பர் மாதம்


செப்டம்பர் மாதம் நெருங்கி விட்டது
பல குடும்பங்களில், கையில் கிடைக்கப் போகும் போனஸ் பணத்தை என்ன செய்வது என்ற சிந்தனை அதிகமாக ஓட ஆரம்பித்திருக்கும்...
போனஸ் பற்றி சில விஷயங்களை பதிவு செய்யலாமே என்று ஒரு எண்ணம் ஓடியது..

எத்தனையோ தொழிற் சங்கங்களில் மிக முக்கியமாக கேட்கப் படும் கேள்வி போனஸ் என்பதாக தான் இருக்கும்...

கொடுக்கப் படாத ஊதியம் தான் போனஸ் என்று எத்தனையோ தொழிற்சங்க கூட்டங்களில் கூறினாலும் தொழிற் சங்க கூட்டங்களுக்கு செல்ல முடியாத எத்தனையோ தொழிலாளர்கள் நம் உலகில் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்...

போனஸ் என்பது எதோ முதலாளி தனக்கு வரும் லாபத்தில் இருந்து பங்கு தருகிறார் என்ற தவறான போக்கே அனைவர் மத்தியிலும் இருக்கிறது...

ஒரு தொழிலாளிக்கு மாத சம்பளமாக கொடுக்கப் படுவது 28 நாட்களை கணக்கில் வைத்து தான் [பெப்ரவரி]
பிற மாதங்களில் வரும் மீதி நாட்களை கணக்கில் சேர்த்தால் மொத்தம் 29,30 நாட்கள் வரும்...
அந்த நாட்களுக்கான சம்பளம் தான் ஆண்டு மொத்த சம்பளத்தில் 8.5% என்று கணக்கு செய்யப் பட்டிருக்கிறது...

அதாவது 
ஜனவரி யில் கொடுக்கப் பட்ட சம்பளம் 28 நாட்கள், மீதி 3 நாட்களுக்கு சம்பளம் கொடுக்கப் படவில்லை
மார்ச் சில் கொடுக்கப்பட்ட சம்பளம் 28 நாட்கள், மீதி 3 நாட்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை
ஏப்ரல் லில் கொடுக்கப் பட்ட சம்பளம் 28 நாட்கள், மீதி 2 நாட்களுக்கு சம்பளம் கொடுக்கப் படவில்லை..
இப்படி கணக்கு போட்டால்
ஆண்டுக்கு 29 நாட்கள் வரும்...
லீப் ஆண்டுக்கு 30 நாட்கள் வரும்...

மாதத்திற்கு ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை தருகிறேனே என்று முதலாளிகள் வாதிடுவது காதில் விழுகிறது...

வாரத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்பது தான் வழக்கம் என்று உங்கள் மனசாட்சி கதறுவதும் என் காதில் விழுகிறது..

30.8.11

நாட்டாம...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான மார்கண்டேய கட்ஜு, நேற்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தியின் படி அருமையான[?] கருத்துக்களை அள்ளி தெளித்துள்ளார்..

காட்டு மிராண்டி தனமான செய்கைகளை செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை தான் தர வேண்டும் என்றும் அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று கூறியுள்ளார்..

நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதை குறிப்பிட்டு கேட்கப் பட்ட இன்னொரு கேள்விக்கு அவர் கூறியிருக்கும் பதில் தான் நாட்டாமை தீர்ப்பு சரியாக சொல்வதில்லை என்று உறுத்திக் காட்டுகிறது..

நீதிபதிகள் லஞ்சம் வாங்குவது தவறு தான் என்றும், கடுமையான கண்டிப்பு காட்ட பட வேண்டும் என்று கூறிவிட்டு, நீதிபதிகள் லஞ்சம் வாங்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் தவறு என்று தன் இனத்திற்காக பரிந்து பேசுகிறார்...

நன்றாக படித்து ஒழுக்கம் பழக்க வழக்கம் குறித்த அனைத்து விழிப்புணர்வும் உள்ள நீதிபதிகளே சூழ்நிலை காரணமாய் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பரிந்து பேசும் நீங்கள்,

உங்கள் வாயாலேயே காட்டுமிராண்டி என்று  பட்டம் சூட்டப்பட்ட கல்வி அறிவு அவ்வளவாய் இராத, தன் இனத்தவரை கூண்டோடு கொலை செய்த ஒருவனை பழி வாங்க புறப்பட்டது தவறு என்று எப்படி கூற முடிகிறது...

உங்கள் நீதிபதி தவறு செய்ய காரணம் சூழ்நிலை என்றால், ராஜீவை கொலை செய்ததும் எதோ ஒரு  சூழ்நிலை தானே...

ராஜீவ் ஒரு தேசத்தின் பிரதமர் என்பதாலேயே அவர் செய்தது எல்லாம் தவறு இல்லை என்றால், அடிமட்ட குடிமகன் செய்தது மட்டும் எப்படி தவறு என்று எடுத்துக் கொள்ள முடியும்...

உங்கள் வாதப் படியே, ஒருவன் திருந்துவதற்கு தான் தண்டனையை நீதிமன்றம் வழங்குகிறது என்றால் அவனை கொலை செய்வதால் எப்படி அவன் திருந்துவான் என்று எதிர்பார்க்க முடியும்...

தமிழ் நாட்டை தவிர ஈழ தமிழர்களுக்கு ஆதரவாய் எந்த மாநிலமும் இல்லை,
அவர்கள் பார்வையில் ராஜீவை கொலை செய்தவர்கள் என்ற பார்வை தான் உள்ளது...

ஆக இவர்களின் மரண தண்டனையை தள்ளி வைத்து மற்ற மாநிலத்தின் வோட்டு வங்கியை குறைத்துக் கொள்ள எந்த தேசிய கட்சியும் தயாராய் இல்லை, மத்திய அரசை பகைத்துக் கொள்ள எந்த தமிழக மாநில அரசும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது...

அதே நாளிதழில் வாசகர் கடிதங்களில் பெர்னாண்டோ என்பவர் எழுதியுள்ள கடிதத்தில் கட்ஜுவுக்கு சரியான பதில் குடுக்கிறார்... எவ்வளவு தான் அவன் பெரிய தவறு இழைத்திருந்தாலும், அவனை தூக்கு கயிறுக்கு அனுப்புவது என்பது காட்டு மிராண்டிதனமே என்று சமுதாயத்தை சாடுகிறார்...

எத்தனையோ தமிழ் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்,
எத்தனையோ தமிழ் பெண்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர்..
எத்தனையோ தமிழ் பெண்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனர்..
எத்தனையோ முறை நீதி வெட்கி தலை குனிய காரணமான நபர்கள் காட்டுமிராண்டிகள் இல்லை என்றால்
அவர்களை கொலை செய்த இவர்களும் காட்டு மிராண்டிகள் அல்ல என்பதே உண்மை..

யாரோ செய்த தவறுக்கு யாரோ பொறுப்பாக முடியுமா என்று கேட்டால், கேள்விகள் பிறந்து கொண்டே தான் இருக்கும்..
அந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் வரை தீர்ப்பை மாற்றி சொல்லுங்கள்...

http://www.thehindu.com/todays-paper/tp-national/article2407436.ece

29.8.11

கண்ணீர் அஞ்சலி..

இந்திய மக்களை காப்பாற்ற போராடினாரா அல்லது அரசு சாரா அரசு அல்லாத அமைப்புகளையும் பெரும் நிறுவனங்களையும் காப்பாற்ற போராடினாரா என்று பெரும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகவும் அமைதியாக சென்றது இரு செய்திகள்..
அமர்ஜீத் என்ற பதினெட்டு வயது கடிகாரம் பழுது பார்க்கும் இளைஞன் போராட எடுத்த வழி தற்கொலை... 

தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் மூன்று பேரின் தண்டனையை நிறுத்தி மன்னிப்பு வழங்குமாறு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு குழுவினரும் போராடிக் கொண்டிருக்கும் பொழுது , காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி போராட தேர்ந்தெடுத்த ஆயுதம் தற்கொலை.. 

முத்துக் குமரன் என்ற இளைஞன் தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து போராடி தியாகி என்று இந்த சமூகத்தால் பட்டம் சூட்டப் பட்டு சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக விளங்குகிறார்...

போராடும் குணம் கொண்ட மக்கள் இங்கு குறைவு,

ஒருவன் போராடினால் அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம், அதை பற்றி பேச ஒரு கூட்டம், தார்மீக ஆதரவு தரும் கூட்டம், அவனுடன் சேர்ந்து நிற்கும் ஒரு கூட்டம்... தனி மரம் தோப்பாகாது என்று வழக்கு மொழி உண்டு, ஆனால் ஆப்பாக முடியாது என்று எந்த மொழியும் இல்லை..

கங்கை நதியை சுத்தப் படுத்த வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்த நபர் இறந்த பிறகே ஊடகங்களின் பார்வையில் சிக்குகிறார்...

மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் இரோம் ஷர்மிளாவை இன்னும் பல ஊடகங்கள் அண்ணாவை பிரபலப் படுத்தியது போல் எடுத்துக் காட்டாததால் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்..

இப்படி வாழ்க்கையில் போராட்டம் என்பது இன்றியமையாததாக போராடி உயிர் நீத்தவர்கள் வரலாற்றின் பக்கங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்... 

ஆனால் போராடும் துணிவு இல்லாமல் இது போல் தற்கொலை ஆயுதத்தை எடுத்து போராடுவது என்பது கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு என்ற அர்த்தத்தில் தான் பதிவாகும்...

சமுதாயம் கழிவிரக்கம் காரணமாக இப்பொழுது அவர்களை தியாகியாக்கி போற்றலாம்.. 
ஆனால் வரலாற்றின் பக்கங்களில் அவர்கள் தியாகிகள் என்ற பக்கத்தில் இருக்க மாட்டார்கள், கோழைகள் என்ற பக்கத்தில் தான் இருப்பார்கள்...

உங்களுடன் போராட எவரும் இல்லை, என்று எண்ணாதீர்கள்...
உங்கள் போராட்டம் உடனே முடிவு தரவில்லை என்று அவசரப் படாதீர்கள்..
நீங்கள் ஒரு தீக்குச்சி, உரசுங்கள் அது பற்றிக் கொள்ளும்...
அதை விட்டு விட்டு நீங்களே பற்றி கொள்ளாதீர்கள்... போராட்டம் உங்களுடன் சாம்பலாகி விடும்...

நீங்கள் போராட இந்த உலகில் இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்..

27.8.11

கலக்குங்க.. குழப்புங்க..

சின்ன புள்ள தனமாய் நடந்து கொள்வதை ஆணிவேர் அடிக்கடி விமர்சனம் செய்ததை வாபஸ் பெரும் தருணம் வந்து விட்டதாகவே தெரிகிறது.. நமது நாட்டின் அடுத்த பிரதமராய் நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முன் நிறுத்தப் பட்ட பொழுது அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார் என்று திரு. திக் விஜய் கூறியதை உறுதி படுத்தி உள்ளார் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ராகுல் காந்தி அவர்கள்... 


இவர் உரை நடத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லாமல் வேண்டுமென்றே ஒரு குட்டையை குழப்பி விட்டு சென்றுள்ளார் ராகுல்.. ஒரு வேளை பிரதமரையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வர காங்கிரஸ் ஒத்துக் கொண்டதால் வந்த எரிச்சலா என்று தெரியவில்லை... எது எப்படியோ தான் ஒரு தேர்ந்த அரசியல் வாதி என்பதை கோபம் கலந்த பேச்சில் நிரூபித்து விட்டார்... என்ன ஒரே ஒரு பிரச்சினை அவர் முகத்திரை கிழிந்து தொங்குவது தான் பார்க்க சகிக்க முடியவில்லை... 

அவருக்கு சில கேள்விகள், அநேகமாய் அனைவருக்கும் எழுந்திருக்கும்...

1. உங்கள் அரசு இந்த ஊழலை ஒழிக்க இத்தனை காலமாய் என்ன செய்தீர்கள்?

2. வேறு கட்சி ஆட்சி செய்தால் ஒரு நீதி [உத்தர பிரதேசம்] உங்கள் கட்சி ஆட்சி செய்தால் ஒரு நீதி [ மகாராஷ்டிரம் ] என்ற உங்கள் வெளிப்படையான எண்ணம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது?

3. முஸ்லிம் லீகும், பொதுவுடைமை கட்சிகளும் இணைந்து தான் இந்திய சுதந்திரத்தை வென்று எடுத்தார்கள் என்ற உண்மையே இருட்டடிப்பு செய்து எதோ காங்கிரஸ் மட்டுமே சுதந்திரம் வாங்க உதவி புரிந்தது என்ற கட்டுக் கதைகளை புழக்கத்தில் விட்ட உங்களை எப்படி நம்புவது என்று தெரியவில்லை...

4. வெளிப்படையான தன்மை இருந்தாலே போதுமானது என்று கூறியுள்ளீர்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற வெளிப்படையான தன்மை ஏற்கனவே அமுலில் உள்ளது... ஆனால் அவற்றில் ஒவ்வொரு துறையாக சேர்ப்பதை விட்டு விட்டு தேசிய இறையாண்மை என்ற போர்வையில் பல்வேறு துறைகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்துக் கொண்டிருக்கும் பொழுது, எங்கே இருக்கிறது நீங்கள் கொண்டு வந்த வெளிப்படை தன்மை என்ற கேள்வி சாதாரணமாய் எழுவது தவிர்க்க முடியவில்லை...

5. தேர்தல் ஆணையத்தின் மேலே அவர்களுக்கே நம்பிக்கை இல்லை, எழும் சந்தேகங்களை புரளி என்று புறந்தள்ளி விடாமல் அது உண்மையோ என்று என்னும் அளவுக்கு துண்டு சீட்டு, கண்ணாடி பெட்டி என்று அடுக்கடுக்காய் தேர்தல் வேலைகளை இடியாப்ப சிக்கலாய் மாற்றுவது போலவே லோக்பால் மசோதாவை கொண்டு வரும் எண்ணம் உண்டு என்பதை இவ்வளவு வெளிப்படையாய் பேசுவீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது...

ஊழல் ஒழிக்க அரசு மனது வைத்தாலே போதும், ஊழலை ஒழிக்க முடியும்.. அதை விட்டு விட்டு ஊழலை தடுக்க புறப்படுகிறோம் என்று கிளம்புவது ஊழலை ஒழிக்கும் எண்ணம் துளி கூட உங்களுக்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ளும் வெளிப்படையான எண்ணத்தையே காட்டுகிறது...

கல்வியா? கொள்ளையா?

நமது நாட்டை ஆண்டு வரும் அரசு, மாணவர்களின் நலன் கருதி கல்வி கடன் கொடுக்கிறதா அல்லது தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கல்வி கடன் வழங்குகிறதா என்று இருவேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இதை ஒரு பெரும் மூலதனமாக ஒவ்வொரு வங்கிகளும் கண் வைத்திருப்பதை மறுக்க எவரும் தயங்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்... இதில் எவ்வளவு லாபம் எவ்வளவு நஷ்டம் என்ற வரவு செலவுக் கணக்குக்குள் செல்லாமல் இந்த கல்வி கடன் என்னும் மாய உலகில் மாணவனும் அவனது பெற்றோர்களும் எப்படி அவதிப் படுகிறார்கள் என்ற பதிவே இது... 

ஒவ்வொரு முறையும் கல்வி கடன் வழங்க வங்கிகள் மறுக்கும் சமயத்தில் பொங்கி எழும் ஊடகங்கள், ஏனோ இந்த கல்விக் கடனின் பின்னால் உள்ள ஒரு செய்தியை சரியாக உற்று நோக்காமல், அதை சரி செய்யும் நோக்கத்திலும் ஈடுபடவில்லை என்பது ஊடகங்களை நாள்தவறாமல் கவனித்து வரும் எண்ணத்ரவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்...

ஒரு மாணவன் கல்வி கடன் வாங்க அவன் நினைக்கும் வங்கிக்கு செல்ல முடியாது என்று அவனுக்கு அறிவுறுத்தப் படுகிறது, இந்த வார்டில் உள்ள மக்கள் இந்த வங்கியில் தான் கல்வி கடன் வாங்க வேண்டும் என்று ஒரு விதி இருப்பதாக தெரிகிறது..

ஒவ்வொரு மாணவனின் பெற்றோரும், எந்த வங்கியிலும் கல்வி கடன் இது வரை வாங்கவில்லை என்று கல்வி கடன் வழங்கும் அனைத்து வங்கிகளிலும் சென்று விண்ணப்ப தாளில் முத்திரையும் கையெழுத்தும் பெற்று வர வேண்டும்...

இவர்கள் போடும் முத்திரைக்கும் கையெழுத்துக்கும் சில வங்கிகளில் ஐம்பது ரூபாயும் சில வங்கிகளில் நூறு ரூபாயும் இதர வருமானம் என்ற தலைப்பின் கீழு ரசீது குடுத்து வசூலிக்கன்றனர்... அந்த கல்வி கடனை வாங்க குறைந்தது இருபது வங்கிகளுக்கு செல்லும் பெற்றோர்களின் மன உளைச்சலும், பண விரயமும் கணக்கிட்டு பார்த்தால் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

பணம் இல்லாத ஒரே காரணத்தால் தான் மேல் படிப்புக்கு தன் பிள்ளைகளுக்கு கல்வி கடன் வாங்க செல்கின்றனர் பெற்றோர்கள், அவர்களை இப்படி அழைக் கழிப்பதை விட்டு விட்டு எது எதற்கோ குடும்ப அட்டையில் முத்திரை குத்தும் அரசு ஊழியர்கள், கல்வி கடன் வழங்கப் பட்டுள்ளது என்று முத்திரை குத்தினால், மாணவன் ஏற்கனவே கல்வி கடன் வாங்கியவனா இல்லையா என்று தெரிந்து விடும்... 

ஒவ்வொரு வங்கியும் தன் வருமானத்திற்காக ஏழை மாணவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... இதற்கு விடிவு காலம் வர சம்பந்தப் பட்ட மாணவனின் ஒத்துழைப்புடன் ஆணிவேர் போராடும் என்று இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.. விரைவில் இது குறித்து பல ஆவணங்களையும் சேகரித்த பிறகு ஆதாரத்துடன் சமூகத்தில் நிலவும் இந்த கறையை ஆணிவேர் ஊடறுக்கும் என்று கூறிக் கொள்கிறோம்...

இந்த விஷயத்தில் வாசகர்களும் தங்களுக்கு தெரிந்த அநீதிகளை பின்னூட்டங்களில் பட்டியலிட்டால் அது குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்களை பெற்று இந்த சமூக அவலம் நீங்க வழி இருக்கிறதா என்று ஆராயப் படும் என்று தெரிவித்துக் கொள்கிறது ஆணிவேர்...

24.8.11

வரும் ஆனா வராது..

அன்றாடம் எதோ ஒரு ஊடகத்திலோ நாள்காட்டியிலோ தவறாமல் ஒலிபரப்பப் படுவதில் ஒன்றாக ஜோதிடமும் உள்ளது... நம் வாழ்க்கை என்பது ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டது என்று பரப்பப் பட்டு வருகிறது... இவர்கள் சொல்வது போல் அனைத்தும் ஏற்கனவே விதிக்கப் பட்டதா, விதி என்று ஒன்று உள்ளதா? இது தான் இன்றைய தலைப்பு...

ஊழ் என்ற தலைப்பில் திருவள்ளுவரே எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார் என்று திருவள்ளுவரையும் சித்தர்களில் ஒருவராக்கி தங்கள் ஜோதிடத்துக்கு மரியாதை தேடுகின்றனர் சிலர்.. திருக்குறளின் உண்மையான அர்த்தம் என்ன என்பது திருவள்ளுவரே வந்து சொன்னால் தான் உண்டு... மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு படித்தால் மஞ்சளாகவே தெரியும் திருக்குறள்.. அதே போல் தான் பச்சை கண்ணாடி போட்டு படித்தாலும்.. கடவுள் உண்டு என்று திருக்குறள் சொல்வதாக பரிமேலழகர் கூறினால், இல்லை என்று எழுத கலைஞரால் முடியும் என்னும் பொழுது எது உண்மை என்பது ஊழ் தலைப்பிலும் பார்க்கலாம்.. அவர் விதி என்று கூறியது அந்த கால கட்டங்களில் இருந்த அரசாட்சியின் சட்ட விதிகள் குறித்தா என்பது தெளிவாக தெரிய நமக்கு அந்த கால கட்டங்கள் குறித்த வரலாறு பார்வை போதுமானதாக இல்லை... 

தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்கு தேவையற்ற பாகத்தை மறைத்து விடுவதால் நியாயமாக தோன்றும் சந்தேகங்கள் தனக்கு உண்டான பதில் கிடைக்காமல் அனாதையாக திரிகின்றன... 

அனைத்து ஜோசியர்களும் வாழ்க்கை குறித்த அனைத்தும் ஏற்கனவே எழுதப் பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு அதை மாற்ற பரிகாரம் செய்யலாம் என்று கூறுவது அவர்களின் முதலுக்கே ஆப்பு அடிக்கிறது...

எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்று எதிர்காலத்தை நோக்கி கூறுவது, செய்யும் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கு... 

எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்றால் அதை கேள்வி கேட்க முடியாது... அதை மாற்ற முடியாது.. அப்படி மாற்றினால் அதுவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்... கடவுளால் மாற்ற முடியும் என்றால் அதுவும் ஏற்கனவே திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்.. ஏற்கனவே எழுதிய விதியை மாற்ற முடியாது என்றால் கடவுள் காணாமல் போய் விடுகிறார்... ஆனால் மிகவும் சாமர்த்தியமாக கடவுள் விதியை மாற்ற முடியும் என்று கூறுவதன் மூலம் ஏற்கனவே அனைத்தும் திட்டமிடப் பட்டவை தான் என்பது வாதத்துக்குள் வர மறுக்கிறது... இதை புரிந்து கொள்ள யாரும் விளக்கி சொல்ல முடியாது ஒவ்வொருவரும் யோசித்தால் ஒழிய இந்த வாதம் விதண்டாவாதமாக வளர்ந்து கொண்டு தான் இருக்க போகிறது...

சரி, அப்படி எல்லாமே திட்டமிடப் பட்டவை இல்லை என்றால் நம் உலகில் நடக்கும் காரண காரியங்களின் காரணம் என்ன? என்று கேள்வி எழுவது இயல்பே...

நம் வாழ்வில் மூன்றாவது மனிதனின் செயலின் பாதிப்பை நாம் உணர்வது தான் விதி என்று வரை அறுக்கப் படுகிறது... எவனோ ஒருவனின் கவனக் குறைவே நம் வண்டியின் சக்கரத்தை பஞ்சராக்குகிறது...  நம் வண்டி பஞ்சராகுவதின் காரணம் செவ்வாய் அல்லது வியாழன் என்றால் எப்படி சிரிப்பு வரும் என்பதை சற்று யோசித்துப் பார்த்தால் கீழே சொல்லப் போகும் விளக்கம் நன்றாக புரியும்...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் விலை வாசி உயரும் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம்... ஆனால் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எந்த கிரகங்கள் மேல் நாம் குற்றம் சாட்டுகிறோம்.. 

ஊழல் தலை விரித்தாடுவது கிரக சாரங்களின் நிலை என்றால் ஏன் நாம் காங்கிரஸ் அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.. ஒரு வேளை அப்படி விமர்சிப்பது நம் விதியோ? இப்படி கேட்டுக் கொண்டே போகலாம்.. மனிதன் கண்டுபிடித்த மிக சிறந்த கண்டுபிடிப்பு விதியாக தான் இருக்கும்.. 

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக 

என்ற குறளை அனைவரும் புரிந்து கொண்டாலே நம் வாழ்வில் இருள் போல் போர்த்தியிருக்கும் துன்பங்கள் அகன்று போய் விடும்...

[வானிலை ஆய்வு அறிக்கை எப்படி தவறாக வந்தாலும் அதை அறிவியல் என்று ஏற்றுக் கொள்கிற நீங்கள் என் ஜோசியத்தை அதே போல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்பவர்களா நீங்கள், பூகோள பாடத்தை எத்தனை பேர் உங்கள் பிள்ளைகள் படிக்க நீங்கள் ஊக்கப்படுத்தி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள்... விடை உங்களுக்கே கிடைக்கும்...]

23.8.11

முற்றும் கோணல்...

தெரியாமல் பேசுவதும் 
தெரியாதது போல் பேசுவதும் 
தெரிந்தே பேசுவதும் 
தெரிந்தும் தெரியாமல் பேசுவதும்
இந்த நான்கு வகைகளில் இது எந்த வகை என்று தெரியவில்லை...

சட்டமன்ற உறுப்பினர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொது பாட புத்தகங்களை வழங்கியாகி விட்டது, ஆனால் சமச்சீர் கல்வியில் உள்ள குறைபாடுகள் கலையப் படவேண்டும் என்று பேசினால், சமச்சீர் கல்வி என்பது பாட புத்தகங்கள் மட்டுமே என்னும் எண்ணத்தில் பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ... 

இதை தெளிவுப் படுத்த வேண்டிய அமைச்சர்கள் இதற்கு எப்பொழுதும் போல் மேஜையை தட்டி ஜால்ரா போட்டு உள்ளனர்...

ஒரு வேளை சமச்சீர் கல்வி என்பதே பொது பாட புத்தகம் மட்டுமே என்ற எண்ணத்தை நிலை படுத்தவே இப்படி பேசி உள்ளார் என்றால் அதை தட்டிக் கேட்க வேண்டிய எதிர்கட்சியும் கழுதை குதிரை என்று காமடி பண்ணி கொண்டிருக்கிறார்கள்... [என்னிடம் பேசிய ஒருவர் சமச்சீர் கல்வி என்பதை அரசு பொது பாட திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்று கூறினார்... எந்த ஊடகத்திலும் அதை பற்றிய தடயம் கிடைக்காததால் அதை பற்றி இங்கு பதிவு செய்ய முடியவில்லை...]

நீதிமன்றமும் மக்கள் மன்றமும் தான் இந்த மாற்றத்தை வேண்டியது,
பா.ம.க வும் பொது உடமை கட்சிகள் மட்டுமே இதற்க்கு போராடியது போல் அவர்களை குறை சொல்வது எதற்கு என்று தெரியவில்லை... 

ஒரு வேளை சமீப நாட்களாக அம்மாவுக்கு ஜால்ரா போடுவதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான பொது உடமை கட்சி தற்போது தவறுகளை சுட்டி காட்ட ஆரம்பித்திருப்பதால் வந்த எரிச்சலா என்று தெரியவில்லை..
எது எப்படியோ இது பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் செயலாகும்...
அ.தி.மு.க ஆட்சி மன்றத்திலே ஏறிய அன்றே மிக தெளிவாக ஆணிவேர் கூறியது முதல் கோணல் என்று...
அந்த முதல் கோணலை இன்னும் நியாயப் படுத்திக் கொண்டிருப்பது இந்த அரசு முற்றும் கோணலான பாதையில் செல்வதையே சுட்டி காட்டுகிறது...

21.8.11

மறக்காமல் சிந்திக்கவும்..

ரேஷன் அரிசி 'அம்மா' போல் இருக்கிறது - உணவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜா..

ரேஷன் அரிசி நன்றாக இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் கூறியதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.. அரிசி நன்றாக இருக்கிறதா இல்லை அம்மா போல் மோசமாக இருக்கிறதா என்ற விவாதத்துக்குள் போகாமல் சற்று நகைச்சுவையாக சிந்தித்து பார்க்கலாமே என்று இந்த பதிவு இடப்படுகிறது...

உணவுத்துறை அமைச்சர் இப்படி கூறிவிட்டதால் மற்ற அ.தி.மு.க.வினர் இந்த அரிசி விஷயத்தை வைத்து எப்படி எல்லாம் பேசி அம்மாவின் கவனத்தை கவரலாம் என்று ஒரு சின்ன கற்பனை...

"ரேஷன் அரிசி அம்மா போல் இருப்பதால் வெளியில் யாரும் அரிசி வாங்குவதில்லை..."

"பொது மக்கள் வெளி சந்தை அரிசி வாங்காததால் விலை கிடு கிடு உயர்வு - அம்மா  கொடுத்த அருமையான ரேஷன் அரிசி தான் காரணம்.."

"நான் சாப்பிடுவது தமிழ் நாட்டு ரேஷன் அரிசி தான், அம்மாவும் அதையே தான் சாப்பிடுகிறார்..."

"தமிழகத்தில் அம்மா கொடுத்த அரிசி என்பதால் கலைஞர் குடும்பம் தவிர அனைவரும் ரேஷன் அரிசி தான் உண்கின்றனர்.."

"கலைஞருக்கு  தெரிந்தால் பதவி போய் விடுமே என்று தி.மு.க வினர் யாரும் ரேஷன் அரிசி உண்பதை வெளியில் சொல்வதில்லை"

சிரிக்கவும்
மறக்காமல் சிந்திக்கவும்..

20.8.11

தள்ளி வைக்கப்பட்டுள்ளது சந்தோசம்..

சமச்சீர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப் பட்டதாலேயே எதோ சமச்சீர் கல்வியே வந்து விட்டது போல் குதிக்கிறது அதிக வாக்கு வங்கி உள்ள எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த கட்சி.. யாருக்கும் வெற்றி இல்லை யாருக்கும் தோல்வி இல்லை என்று பெருந்தன்மையுடன் கூறிய கலைஞர் திடீரென்று வெற்றி விழா கொண்டாடுங்கள் என்று கூறியதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை..

எதோ சமச்சீர் பாடப்புத்தகம் மட்டுமே சமச்சீர் கல்வி என்பது போல் பேசுகிறார் திடீரென்று எதிர் கட்சி தலைவர் அந்தஸ்த்து பெற்றவர்..

முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இன்னும் அரசு வெளியிடவில்லை என்று பேசுகிறார் மரு. ராமதாஸ் அவர்கள்...

மொத்தம் 109 பரிந்துரைகளை கூறியுள்ளதாக தீக்கதிர் நாளேட்டில் வெளியான கட்டுரை வெளியிட்டுள்ளது...

ஏற்கனவே பல தனியார் பள்ளிகள் தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை அரசு வெளியிட்டுள்ள பட்டியல்படி புத்தகங்களை தருவித்து தங்கள் கொள்ளையை தொடங்கி உள்ளனர்..

ஏற்கனவே தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் திருத்தி அமைக்கப் பட்ட பிறகும் மீண்டும் ஒரு குழுவை அமைத்து மீண்டும் கட்டணத்தை சரி பார்க்க போவதாக கூறியுள்ளனர்..

இனைய தளத்தில் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்னும் ஏற்றப் படவில்லை என்ற உண்மை கசக்கிறது...

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒரே சீரான கல்வி கிடைத்தால் தான் சமச்சீர் கல்வி என்ற உண்மையான நிலை வரும்..

கத்தி கத்தி தொண்டை வலி வருவதால்  மிகவும் அதிகமான மாணவர்கள் கொண்ட வகுப்புகளுக்கு பாடம் எடுக்க செல்லவே விருப்பம் வரவில்லை என்கிறார் ஒரு அரசு பள்ளியின் ஆசிரியர்... இதே தான் அநேகமாக மனிதர்களாய் இருக்கும் அனைத்து அரசு ஆசிரியர்களின் கருத்தாகவும் இருக்கும்.. குறைந்த சம்பளம் வாங்குவதால் கற்று தர விருப்பம் இல்லாமல் தனி வகுப்புகள் நடத்தி கற்றுத் தருவதாக எண்ணி பாடங்களை வாந்தி எடுத்து வருகின்றனர் ஆசிரியர்கள்...

அபகஸ் என்ற சீன கணக்கு முறையை வைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்த நிறுவனங்களுக்கும் ஆப்பு அடித்திருக்கிறது சமச்சீர் கணக்கு  புத்தகத்தில் இருக்கும் பாடங்கள்.. அது தெரியாமல் ஏற்கனவே பல மாணவர்கள் இந்த வருடம் அபகஸ் கல்வி நிலையங்களில் சேர்ந்து விட்டனர்..

இந்த பத்து நாட்களில் ஒன்றே ஒன்று தெரிந்தது இந்த தீர்ப்பினால் இன்னும் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்று கணக்கு போட ஆரம்பித்து விட்டனர் தனியார் பள்ளி நிறுவனங்கள்..
வழக்கம் போலவே நடக்கின்றன அரசு பள்ளிகள்...

ஒவ்வொரு மாணவனின் தனித் திறமையை ஊக்குவித்து அவனை எந்த துறைக்கு அனுப்புவது என்று முடிவெடுக்கும் ஆற்றலை வகுப்பு ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளும் பொழுது சமச்சீர் கல்வி நனவாகும்...

அதுவரை இப்பொழுது நடைமுறையில் இருப்பது வெறும் கானல் நீர் தான்...
[கானல் நீர் என்பது எங்கோ இருக்கும் எதோ ஒன்றின் பிம்பம் என்பதால் அது பொய் அல்ல, ஆனால் அது நீங்கள் காணும் இடத்தில் இல்லை என்பது தான் உண்மை]

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=59538

http://www.thehindu.com/news/cities/Chennai/article2357426.ece

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2355978.ece

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2931

http://www.scribd.com/doc/62715613/Samachcheer-Kalvi-Cpi-m

18.8.11

கனவு மெய்ப்படுமா?

ஒரு போராட்டம் வெற்றி அடைய ஒற்றுமை மிக முக்கியம்.. அந்த ஒற்றுமை வருவதற்கு ஊடகத்தின் தேவை அல்லது மக்களிடம் நேரிடையாக செல்வது அவசியம்... அண்ணா ஹஜாறேவின் போராட்டத்திற்கு ஊடகங்களின் பங்கு மிக அதிகம்.. அவர் நேரிடையாக மக்களை சென்று சந்திக்கவில்லை, பொதுக் கூட்டம் போடவில்லை அதனால் தான் அவர் போராட்டத்தில் பங்கு கொள்ள ஊடகங்களின் பக்கமே செல்லாத யாருக்கும் விருப்பமில்லை [தெரியவில்லை என்பது தான் உண்மையும் கூட]. தூக்கு தண்டனை கைதிகளின் போராட்டத்திற்கும் அதே நிலைமை தான் என்ன இங்கு சுய ஊடகங்களான வலைப்பக்கங்களின் அணிவகுப்பு சிறந்த உதவி புரிகிறது... 

ஆனால் இந்த மூன்று நாட்களில் வலைப் பக்கங்களில் சுற்றிய பொழுது என் கண்ணில் பட்ட பல பின்னூட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இந்த போராட்டங்களின் ஒற்றுமையை குலைப்பதாக உள்ளது..
நீ பூநூளிஸ்ட், 
நீ மார்க்சிஸ்ட், 
நீ லெனினிஸ்ட், 
நீ இந்து வெறியன், 
நீ முஸ்லிம் வெறியன்,
நீ கன்னடன், 
நீ தமிழன், 
நீ ஈழ தமிழன் 
என்று அனைவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஒவ்வொரு திசையாக நிற்கிறோம்..

சமச்சீர் கல்விக்காக இடது சாரிகள் ஜூலை 24ஆம் தேதியை வகுப்பு புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தால் அதில் கலந்து கொள்ளாமல் வலது சாரிகள் ஜூலை 26 ஆம் தேதியை வகுப்பு புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கின்றனர்.. ஜூலை 26 வகுப்பு புறக்கணிக்கும் போராட்டத்தை வலது சாரிகள் நடத்துவதால் இடது சாரிகள் புறக்கணிக்கின்றனர்.. ஆக மொத்தம் ஒரே ஒரு போராட்டம் கூட ஒற்றுமையுடன் நடக்கப் போவதில்லை... 

நம்மை சுரண்டி ஊழலை வளர்த்து சம்பாதிக்கும் பெரிய பண முதலைகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை.. ஆனால் நாம் ஒருவரை ஒருவர் ஊக்கப் படுத்துவதில்லை... 
எனக்கு கடவுள் இல்லை என்று தெரியும், என் மனைவிக்கு கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை, இருவரும் இந்த விஷயத்தில் மோதிக் கொண்டால் வீடு படும் பாடு என்ன என்று எல்லாருக்கும் தெரியும். அது போல் ஏன் நாம் நாட்டில் இருக்கக் கூடாது.. 

உன் கொள்கை உனது என் கொள்கை எனது என்று பேசிக் கொண்டே யார் சரி என்று பார்க்காமல் எது சரி என்று பார்க்கும் பார்வையை வளர்த்துக் கொள்ளும் வரை நீங்களும் நானும் வாய் வலிக்க பேசிக் கொண்டிருக்கலாம், கை வலிக்க எழுதிக் கொண்டிருக்கலாம்... ஆனால் மாற்றம் மட்டும் நழுவிக் கொண்டே போகும்.. 

எது சரி என்று விவாதிப்போம், நம் அனைத்து வித்தியாசங்களையும் மீறி நமக்கு ஒரு ஒற்றுமை உண்டு... 
அது ஏமாற்றப் படுபவர்கள், 
முதுகில் குத்தப் படுகிறவர்கள், 
சுரண்டப் படுபவர்கள், 
கஷ்டப் படுபவர்கள்... 

ஒரு கட்டுரையில் இது குறித்து திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார் ஒருவர், 
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல் என்று,
இது நடக்குமா
என் கனவு நனவாகுமா 
வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப் படவில்லை என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது அல்ல...

17.8.11

சரியான பாதையில் ஓடலாமே

 லெனின் தோழரின் அரசு என்னும் புத்தகம் படித்தவர்கள் இந்நேரம் புரிந்து கொண்டதை கூட காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது .. 

ஒரு அரசின் அடித்தளமான நீதித்துறையும் மற்றும் ஊடகங்களும் இந்தியாவை ஆளும் அரசை அக்கக்காக கழட்டி துவைக்க ஆரம்பித்து விட்டனர் என்பது இன்று புதிதாக வெளிச்சத்துக்கு வந்த NTRO ஊழலும், http://www.dnaindia.com/india/report_court-to-probe-into-national-research-organisation-rs800-crore-scam_1576748 அண்ணா வை மட்டும் காட்டி மக்களின் கவனத்தை அரசின் மேல் எரிச்சல் ஊட்டும் செய்திகளும் உறுதிபடுத்துகின்றன... 

வழக்கமாய் மக்களை கட்டிப் போட்டு வைக்கும் சினிமா செய்திகளும், விளையாட்டு செய்திகளும் கூட எந்த மாற்றத்தையும் தராமல் மக்கள், ஜனநாயகம் என்று கூறப்படும் போலி வார்த்தையின் நிஜமான கோர முகத்தை பார்த்தபடி உள்ளனர்.. 

போதாக்குறைக்கு அனைத்து வளரும் நாடுகளிலும் மூக்கை நுழைத்து கலகம் விளைவிக்கும் உலக ரௌடியும் அண்ணா விஷயத்தில் போகிற போக்கில் எதோ ஒன்றை சொல்லி பத்த வச்சிட்டியே பரட்டை என்று சொல்ல வைக்கிறார்...
 

பரட்டை ஏன் இவர் விஷயத்தில் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.. http://www.thehindu.com/news/national/article2366033.ece அமெரிக்க நிறுவனங்கள் பல அண்ணாவின் குழுவில் உள்ள பலரின் அரசு சாரா இயக்கங்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை... அமெரிக்கா தான் பல நாடுகளில் தனக்கு வேண்டிய அரசை நிறுவி குளிர் காய்கிறது என்பதும் பலருக்கும் தெரியும்... இதற்கு ஆதாரமாக எத்தனை ஜான் பெர்க்கின்ஸ் வந்தாலும் ஒரு அரசு அதை ஒத்துக் கொண்டதாக சரித்திரம் இல்லை... கியூபா அரசு எத்தனை முறை கரடியாக கத்திய பொழுதும், இராக்கில் சதாம் உயிருக்கு பயந்து கூப்பாடு போட்ட போதும் இன்னும் பல ஊடகங்கள் அவற்றை கட்டுக் கதை என்று தான் திரித்து சொல்லி வருகின்றனர்...
 

அமெரிக்காவின் ஆசை என்ன என்று ஆராய்ச்சி செய்து அதை எங்களுக்கு சொல்வீர்கள் என்று எல்லாம் நாங்கள் நம்பவில்லை.. மேலும் அவற்றை தேசிய ரகசியம் என்று கூறி முடக்கி தான் வைக்க போகிறீர்கள்... அவர்களுக்கு காவடி தூக்குவதை விட்டு விட்டு இனி மேலாவது உருப்படியாக நல்லவிதமாக ஆட்சி செய்யுங்கள்... புதிய பொருளாதார கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அரசை எதோ தனியார் நிறுவனம் போல் நடத்தாமல் உங்களை நம்பி வோட்டு போட்ட மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாருங்கள்.. ஏழைகளை  பணக்காரனாக்குகிறேன் என்று கூறி மேலும் அவனை ஏழையாக்காமல், மேலும் ஏழையாகாமல் அவனுக்கு தேவை யானதை கொடுத்து நிம்மதியாக வாழ வையுங்கள்...

அது தான் நீங்கள் உண்மையாக இந்தியர்களுக்கு வாங்கி தரப் போகும் சுதந்திரம்.. இப்பொழுது இருக்கும் சுதந்திரம் வெறும் காகித மலர் தான்..

மந்திரக் கோலை தேடி..

ஊழலை ஒழிக்க மந்திர கோலை தேடி கொண்டிருப்பது, இந்த அரசு ஊழலில் அடக்கி ஒடுக்குவதில் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது...

ஒவ்வொரு முறையும் ஊழல் நடந்ததை கண்டுபிடிக்க அரசு இயந்திரமான உச்ச நீதி மன்றமும் மற்ற அரசு அமைப்புகளும் தான் முயற்சி செய்கின்றது.. அவை கண்டுபிடித்த உடன் அவற்றை விசாரித்து ஊழலை ஒடுக்கி இருந்தால் இப்பொழுது தடுக்கப் போவதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை..

சட்டத்தை நிறைவேற்ற மக்கள் உங்களை அதிகாரத்தில் உட்கார வைத்து விட்டார்கள், யார் தேர்ந்தெடுத்தார்களோ அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் அது ஜனநாயக படுகொலை.. அதை விட்டு விட்டு நீங்கள் செய்யும் தவறுக்கு ஜால்ரா போடாமல் எதிர்த்து கேள்வி கேட்பது ஜனநாயக படுகொலை என்றால் விவரம் தெரியாதவர்கள் கூட எழுச்சி பெற்று விடுவார்கள் என்பது தான் உண்மை... 

எப்படியோ இந்த எழுச்சி நல்ல முறையில் முடிந்தால் சரி.. அதை விட்டு எப்பொழுதும் போல ஒரு திருடனுக்கு பதில் இன்னொரு திருடனிடம் இந்த நாட்டை தூக்கி கொடுத்தால் மீண்டும் எழுவதில் முதுகு வலி தான் வரும்...
எத்தனை தடவை தான் எழுந்து எழுந்து உட்கார்வது என்று கடுப்பு கூட வரலாம்... 

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது... 

போராட்டம் நடத்துவதில் காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கேள்விகள்:

1. போராட்டம் நடத்துவதால் அந்த பகுதிக்கு வரும் மக்களின் உரிமை பாதிக்கப் படும் என்று அக்கறை கொள்ளும் நீங்கள், உங்கள் மந்திரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளும் வாகனத்தில் செல்லும் பொழுது பாதுகாப்பு காரணமாய் சாதாரண மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது கண்ணுக்கு தெரியவில்லையா?

2. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் இருந்த பொழுதே, உங்களுக்கு சாதகமாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடித்த நீங்கள் உங்கள் பலம் நாடாளுமன்றத்தில் அதிகமாக உள்ள பொழுது உங்களுக்கு சாதகமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதா?

3. அண்ணாவுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று கூறும் நீங்கள் இது வரை நீங்கள் பேசியதின் விளைவு தானே இது என்று தெரியவில்லையா? அவர் ஊழல்வாதி என்று உங்கள் அரசு அவரை குற்றம் சாட்டிய பின் நடவடிக்கை எடுக்காமல் அவருடன் பேச்சு வார்த்தை நடத்த தாயாராவது ஏன்?

4. போராட்டம் நடத்த நிபந்தனைகள் உண்டு என்றால் அது அனைவருக்கும் பொதுவா இல்லை எதிர் கட்சிகளுக்கு மட்டும் பொதுவானதா?

5. கடைசியாக, உத்தர பிரதேசத்தில் தடை உத்தரவு அமலில் இருந்த பொழுது எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு சென்று வந்த, உங்கள் ராகுல் காந்தியை உத்தர பிரதேச அரசு கைது செய்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

ஊழலை ஒழிக்க நீங்கள் சொன்ன மந்திரக் கோல் வேறு எங்கும் இல்லை உங்கள் மனசாட்சி தான் அது... மனசாட்சியை அடகு வைத்தவர்கள் தேடிக் கொண்டு தான் இருப்பார்கள்...

16.8.11

பரமபதம்

இலவசங்கள் என்ற பெயரில் லஞ்சம் வாங்கி ஓட்டு வாங்கினார்களா அல்லது அது கொள்கை முடிவா என்று பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இவற்றை எல்லாம் குடுப்பேன் என்று சொல்லி விட்டு அதை எப்படி எல்லாம் குடுக்காமல் நிறுத்த முடியும் என்று கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தின் ஆளும் கட்சியினர்... 
இலவசங்கள் கொடுப்பது சட்டப்படி தவறு என்று நீதிமன்றம் மூலமாகவே சொல்ல வைத்து சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.. 
முதலில் நம் பார்வைக்கு வருவது மாணவர்களுக்கு கொடுப்பதாக கூறிய மடிக்கணினி, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் [கவனிக்க- அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு] குடுப்பதாக [எண்:18 ] தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருந்தாலும், இது வரை அதை பற்றி மூச்சையும் காணோம் பேச்சையும் காணோம்.. இதை பற்றி எந்த ஊடகமும் விசாரிப்பதாக கூட தெரியவில்லை...

இரண்டாவது, சமீபத்தில் சட்ட மன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அம்மையார், தமிழ் நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்..... http://www.maalaimalar.com/2011/08/08150235/No-list-of-those-under-the-pov.html
ஆனால், எண்:4 , வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு 20 . லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அடிப்படையில் வறுமை கோட்டுக்கு கீழே யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் இந்த திட்டங்களை எப்படி செயல் படுத்தப் போகிறார் என்று தெரியவில்லை... 

மூன்றாவது, ஊக வணிகம் ஒழிக்கப் படும் என்று எண்: 49  இல் குறிப்பிட்டுள்ளார்.. இந்த ஆண்டு இது ஒழிக்கப் படாது என்பது தெளிவாக தெரிகிறது.. 

நான்காவது, எண்: 26 இல் இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மருத்துவ வசதி கல்வி ஆகியவை வழங்கப் படும் என்று கூறியுள்ளது இந்த ஆண்டு நிதி அறிக்கையில் இடம் பெறவில்லை...

கடைசியாக என் கண்ணில் உறுத்துவது, 
எண்: 6 இல் வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு மூன்று சென்ட் இடம் அளிக்கப் படும் என்று கூறியுள்ளார்... ஆனால் வெற்றி பெற்று வந்த பின் அவர் ஆளுநர் உரையில் தெரிவித்த கருத்தில் அனைத்து காலியிடங்களும் ஏற்கனவே பழைய அ.தி.மு.க ஆட்சிகளிலே குடுக்கப் பட்டு காலியாகி விட்டதாகவும் இதற்கு மேல் குடுப்பதற்கு தமிழகத்தில் காலி இடங்களே இல்லை என்றும் முகத்திற்கு நேராய் நின்று ஓட்டு போட்ட மக்களின் முகத்தில் குத்தியுள்ளார்.. http://ibnlive.in.com/news/no-waste-land-left-to-give-poor/157599-60-118.html
இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவராய் இருப்பவர் அமைதியாக இருக்கிறார்.. சென்ற தி.மு.க ஆட்சியிலே இது குறித்து சத்தமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்த பொதுவுடைமை வாதிகள் பியூஸ் போன பல்பாய் திரிகிறார்கள்...
இது பற்றி அலச அ.தி.மு.க வின் அதிகாரப் பூர்வ தேர்தல் அறிக்கையை இத்தனை காலமாய் தேடி இன்று தான் இணையத்தில் கிடைத்தது.. http://www.aiadmkallindia.org/AIADMK%20Election%20Manifesto%20-%20Tamil%20Nadu%20State.pdf

அனைத்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இந்த விஷயத்தில் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு கேள்வி கேட்க்காமல் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை..

விளையாட்டா போச்சு

கூலி வேலை செய்யும் தொழிலாளி குறைந்த பட்சம் உடல் உழைப்பை ஆறு மணி நேரங்கள் பயன்படுத்தி வேலை செய்தால் 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு நாள் சம்பளமாய் கிடைக்கும்.. 
கணினி முன் அமர்ந்து மூளையை கசக்கி வேலை செய்யும் தொழிலாளி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு முதல் 14 மணி நேரம் உழைத்து அவன் படும் சிரமத்திர்க்கேற்ப நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்குகிறான்.. 


சம்பள ஏற்றத்தாழ்வுகள் முதலாளித்துவ உலகில் ஏற்புடையது என்பதால் என் கேள்வி அதை பற்றி அல்ல.. 

மேற்கூறிய சம்பவங்களை நம் இந்திய மட்டை பந்து அணியின் செயல்பாடுகளுடன்  ஒத்துப் பார்ப்பது ஆகும்... 

முன்பெல்லாம் தோல்வி அடைந்தால் மிகவும் சாதாரணமாக வெற்றி பெற்ற எதிர் அணியினர் சிறந்த முறையில் விளையாடினார்கள் என்று ஒத்துக் கொள்ளும் மனப் பாங்கும் காணாமல் போய் கொண்டிருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது... விளையாடும் வீரர்களுக்கு ஓய்வில்லை, காயம் அடைந்த வீரர்கள் ஓய்வெடுக்க விட வேண்டும் என்று கூறுவது நம் உழைக்கும் வர்க்கத்தை ஒரு நிமிடம் மனக்கண்ணில் நினைத்து பார்க்க வைக்கிறது... உடல் நிலை சரி இல்லை என்றாலே ஒரு நாள் லீவு கேட்டால் நம்மை கொலை குற்றம் செய்தவன் போல் பார்க்கும் உலகம் இது என்பது மனக் கண்ணில் அகல மறுக்கிறது. 

அணில் கும்ப்ளே மூக்கில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தியது இன்னும் மனக் கண்ணில் இருந்து அகல மறுக்கிறது... 
இவர்கள் விளையாட இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், பணம், உயர்தர சிகிச்சை மற்றும் உல்லாச வாழ்க்கை என்பவற்றை கணக்கில் கொண்டால் ஓய்வில்லை என்று சொல்வது சப்பை கட்டு கட்டுவதாக தெரிகிறது.. மேற்கிந்திய தீவுகளிடம் சென்ற இரண்டாம் நிலை வீரர்களிடம் இருந்த உற்சாகம் இங்கிலாந்துக்கு சென்ற வீரர்களிடம் இல்லை என்பதே உண்மை... 

ஆயிரம் பத்தாயிரம் என்று கஷ்டப் பட்டு சம்பாதித்த காசை தான் விளையாட்டரங்கில் செலவிடுகிறான்.. அந்த காசு வீணாய் போனது என்ற துக்கத்தில் ஒரு ரசிகன் பேசியதை கூட தாங்கி கொள்ளும் மன நிலையில் வீரர்கள் இல்லை என்பது கசப்பான உண்மை... 

ஆக அந்த மன நிலைக்கு வருவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது... விளையாட்டு என்பதையும் மீறி வியாபாரம் புகுந்து விளையாடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது... 

விலை வாசி உயர்வில் ஊக வணிகத்தின் பங்கு என்ன என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு தெரியும் அது போல் மட்டை பந்து, மல்யுத்த விளையாட்டை போல் ஊக விளையாட்டுக்கு தன்னை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது உண்மையோ என்று என்ன தோன்றுகிறது... 
அனைத்து மதங்களும் போலியானது என்ற உண்மை அனைத்து மதங்களின் கொள்கைகளை படித்தவர்களுக்குன் நன்கு புரியும், அது போல் நம் இந்திய தேசத்தில் மட்டை பந்து விளையாட்டும் ஒரு மதமாய் உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஊடகங்கள்.. 

சச்சினை கடவுளாக சித்தரிக்கும் வேலையும் நடக்கிறது... எந்த மது பான விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததாக மார் தாட்டி கொள்ளும் சச்சினை ஏமாற்றி கிங்க்பிஷேர் விளம்பர படத்தில் முன்னணியில் நிறுத்தி உள்ளார் விஜய் மல்லையா... தான் நடித்து கொடுத்தது சோடா விளம்பரத்திற்கு தான் என்று சச்சின் நம்பினால் அவரை நம்புவதற்கு விஷயம் தெரிந்தவர்கள் தயாராய் இருக்கப் போவதில்லை...

இங்கிலாந்து அரசை காக்க இந்திய அணி விட்டுக் கொடுத்ததா?
சூதாட்டத்தின் தலை நகரான இங்கிலாந்து, நம் வீரர்களை காவு வாங்கியதா?
இந்தியாவில் நடக்கும் குழப்பங்களை நீர்த்துப் போக இவை அரங்கேற்றப் பட்டதா?
என்று எண்ணற்ற கேள்வி எழுந்தாலும் என் மனதில் ஒரே கேள்வி...
என்று நம் மக்கள் முக்கியமான பிரச்சினைகள் மேல் கவனம் செலுத்தாமல் இது போன்ற மட்டை பந்து விளையாட்டை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது தான்?

[விளையாட்டை பற்றியும் திரை உலகை பற்றியும் எழுதக் கூடாது என்று நினைப்பதை, அதனுள் ஒளிந்திருக்கும் அரசியல் என்னை விடுவதில்லை... இதன் மீது உள்ள என் மௌனத்தை கலைக்க விக்கிரமாதித்யனின் வேதாளம் போல் அடிக்கடி வந்து கேள்வி கேட்டு பதில் வரவைக்கின்றன][எழுதியுள்ள கட்டுரைக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்தால் ஆணிவேர் பொறுப்பல்ல]

15.8.11

கீச்சு #2

 எவ்வளவு அழுக்கு பண்ணினாலும் கங்கை நீர் புனிதமாக கிருமி இல்லாம இருக்கும்னு சொன்னானே.. எங்க அவன்?

செய்தி: 
குண்டு வெடிப்புகளை விட கங்கை நதி நீரால் அதிகம் பேர் உயிரிழப்பு:அத்வானி கவலை.
 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=294832

என் அனைத்து கீச்சுகளையும் படிக்க...

14.8.11

இன்குலாப் ஜிந்தாபாத்...

விக்கிபீடியா வில் உள்ள தகவல் படி 2009 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வோட்டு சதவிகிதம் 28 .6 % தான். ஆக பெரும்பான்மையான 71 .4 % மக்கள் காங்கிரஸ் வரக்கூடாது என்று வாக்களித்தனர்.. ஆனால் இங்கு எத்தனை பேர் வெறுக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை, எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்று தான் பார்க்கிறார்கள்... ஆகையால் நான்கில் ஒரு பங்கு உள்ள மக்கள் போட்ட ஓட்டால் மீதி உள்ள மூன்று பங்கு மக்கள் அவதிப்படுகின்றனர்... இதை தான் ஜனநாயகம் என்று கூறிக் கொள்கின்றனர்...

அப்படி பட்ட ஜனநாயகப்படி தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் என்ன தவறு செய்தாலும் தேர்ந்து எடுத்துவர்கள் கேள்வி கேட்கக் கூடாது.. அப்படி கேள்வி கேட்டால் அது ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்... ஐந்து வருடம் இவர்கள் தான் ஆள வேண்டும் என்று நீங்கள் அவர்களை  அனுப்பிவிட்டு பின்னால் முதுகில் குத்துவது எந்த விதத்தில் நியாயம்... அப்படி குத்துவதற்கு அவர்களே உங்களுக்கு கத்தியும் எடுத்துக் கொடுப்பார்கள் என்று நம்புவது மடத்தனமில்லையா?

நாங்கள் தப்பு தான் செய்கிறோம், இங்கு யார் தான் தப்பு செய்யவில்லை என்று கேள்வி கேட்கும் அளவுக்கு செய்வது தப்பு என்றே தெரியாத அளவுக்கு தப்பு வளர்ந்துள்ளது.. கேள்வி கேட்கும் ஜனங்கள் கூட யார் அதிக தப்பு செய்துள்ளார்கள் என்று நீதியின் தராசில் எடை போட்டு தீர்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த முறை குறைந்த அளவு தப்பு செய்தவர்கள் ஆட்சி அமைக்க வழி கிடைக்கிறது... தப்பு செய்கிறவன் அதிகாரத்தில் உட்காருவதால் தப்பை நீதியாக்குகிறான்.. வீட்டு வரி கட்ட முடியாதவனை ஜப்திக்கு இழுக்கும் அரசு, பல்லாயிரக் கணக்கான கோடிகளில் வரி கட்டாத ஹசன் அலியை தாம்பாள தட்டில் தாங்கி வளர்க்கிறார்கள்...

அண்ணா ஹஜாரே போன்றவர்கள் கூட தப்பு செய்யும் ஆணிவேரை நோக்கி கல் எறியாமல் எங்கோ எறிந்து கொண்டிருக்கிறார்,

தப்பு செய்யவே, பிரதமரை லோக் பால் மசோதாவுக்குள் கொண்டு வரக் கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது..
தப்பு செய்யவே, அரசு அல்லாத அமைப்புகளை லோக் பால் மசோதாவுக்குள் கொண்டு வரக் கூடாது என்று அண்ணா ஹஜாரே கூறுகிறார்..

இது போதாதென்று உலகின் கட்டப் பஞ்சாயத்து தலைவர் இந்திய அரசுக்கு எல்லா விஷயத்திலும் அறிவுரை கூறுவது போல் எண்ணி குட்டையை குழப்புகிறார்...

போராட்டம் என்பது ஒரு விளம்பர யுக்தியே ஆகும்.. அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று தான் போராடுகிறோம்.. யாருமே வராத இடத்தில் போராட அனுமதி பெறுவதற்கு அவரவர் வீட்டிலேயே உக்கார்ந்து போராடலாமே..
ஊழலை ஒழிக்க தேவை இன்னும் ஒரு சட்டம் அல்ல, மாறாக மக்களை பற்றி சிந்திக்கும் அரசு.. அப்படி பட்ட அரசு அமைய அனைவரும் ஒரே கருத்துக் களத்தில் நிற்க வேண்டும். அதற்கு இணையத்திலும் இதழ்களிலும் எழுதி விழிப்புணர்வு கொடுங்கள், படித்த உடன் பாராட்டி பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இணையம் பக்கமே வராத ஒரு ஐந்து பேரிடம் இதை பற்றி விவாதம் செய்தால் தான் முழு விழிப்புணர்வு வரும்...

ஆகையால் ஈவிரக்கமற்றவர்களிடம் சுதந்திரம் வாங்கி இன்னொரு ஈவிரக்கமற்றவர்களிடம் நம் சுதந்திரத்தை அடகு வைத்ததை... மீட்டு எடுப்போம்.. என்று நம் அனைவரின் வாழ்விலும் விடியல் வருகிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திர நாள்.. அது வரை நாம் கூற வேண்டிய வார்த்தை வந்தே மாதரம் அல்ல...

இன்குலாப் ஜிந்தாபாத்...
புரட்சி ஓங்குக...

வரலாறின் மறுபக்கம்..

காந்தியும் காங்கிரஸ் ஸும் - ஒரு துரோக வரலாறு...
ஏழாவது பதிப்பின் மின் புத்தகம்..
அளவு - 4.5 MB
வடிவம் - pdf

இணையத்தில் படிக்க 
http://www.scribd.com/doc/62254868/GANDHIYUM-CONGRESSUM

பதிவிறக்கி படிக்க
https://rapidshare.com/files/1103364444/GANDHIYUM_CONGRESSUM.pdf

சந்தி சிரிக்கும் இந்திய மானம் என்னும் ராணுவத்தின் அட்டூழியங்களை பட்டியலிடும் ஆனந்த விகடனின் கட்டுரையை படிக்க

http://www.scribd.com/doc/62256141/Santhi-Sirikkum-Indhiya-Maanam

இன்குலாப் ஜிந்தாபாத் 

12.8.11

நீதியின் முன் கடவுள்...

இந்திய சுதந்திர மண்ணில் ராஜாங்க முறை ஒழித்துக் கட்டப் பட சுதந்திரம் வாங்கிய பிறகு சுமார் 24 வருடங்கள் [1971] காத்திருக்க வேண்டியதாகியது... முதன் முதலில் 1969 இல் ராஜாங்க முறை ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப் பட்டது என்பது நம் மக்கள் பிரதிநிதிகள் மேல் இந்த ராஜாக்கள் எப்படி அதிகாரம் செலுத்தி உள்ளனர் என்பது புலனாகிறது.. 

ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு சோம்பேறித் தனமாய் வாழ்க்கை நடத்தி வந்த ஒருவனுக்கு திடீர் என்று உழைத்து சாப்பிட வேண்டும் என்று கூறியதும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்திருக்கும்... ஆனால் நம் வரலாறை நாம் திரும்பி பார்த்தால் ஒரு கரடியிடமிருந்து சிக்கி தப்பித்து வெளி வந்த பின் வேறு ஒரு கரடியிடம் சிக்குவதை தான் வழக்கமாய் வைத்திருக்கிறோம்... ஆகையால் ராஜாக்களாய் வாழ்ந்த இவர்கள் பிற்பாடு அதே பெயரில் பெரும் செல்வந்தர்களாய் வாழ்ந்தார்கள் என்பது தான் சரியானது... இதில் பல ராஜாக்கள் ராஜ் வாழ்க்கை வாழ்வதாய் எண்ணி தன் பிள்ளைகளை ஏழைகளாக்கி விட்டு சென்றார்கள் என்பது தனிப்பட்ட சோக கதை... 

ஆனால் இந்த ராஜாக்களை காப்பாற்ற என்றும் உறுதுணையாய் இருந்தது ஆண்டவன் என்ற அடைமொழியும், துதிபாடும் புரட்டுக்காரர்களும் தான்... அறிவியல் வளர்ந்த பிறகும் ஜாதகம் பார்ப்பதை ஒரு அறிவியல் பாடதிட்டமாய் ஒரு அரசு கொண்டு வந்த பொழுது இப்படி பட்ட பொய் கலந்த கல்வி முறை தான் அரசை காப்பாற்றுகிறது என்பது வெளிச்சமாகிறது... 

அவ்வகையில் திருவனந்தபுரத்து கோயிலில் இருக்கும் நகை கணக்கெடுப்பில் ராஜாவை ஒரு தர்மசங்கடத்தில் இருந்து காப்பாற்ற ஜோசியர்களை வரவழைத்து நாடகம் ஆடுகிறார் திருவனந்தபுரத்து மகாராஜா என்ற பெயரில் வாழும் செல்வந்தர்... அவர் வாழ்வதற்கு அந்த கருவறையில் இருக்கும் நகைகளும் பணமும் தான் உதவுகிறது என்ற எண்ணத்தை ஊர்ஜிதப் படுத்துகிறது ஜோசியர்கள் கூறியிருக்கும் பொய்...

ரத்தம் கக்கி சாவாய் என்று மயில் சாமி சொல்லும் பொழுதும், பரவாயில்லை காசோடு தான் சாவேன் என்று வடிவேல் சொல்வது போல் ஆகிவிட்டது உச்ச நீதிமன்றத்தின் நிலைமை...

ஆன்மீகத்தின் மீது எனக்கு வெறுப்பும் கேள்விக்கணைகளும் வரக் காரணமே இது போன்ற பயமுறுத்தல் தான்.. 
தாயை போன்ற கருணை உள்ளதாக நீங்கள் கூறும் கடவுள் தன் பிள்ளைகள் செய்யும் தவறிற்கு தண்டனை தருவான் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை... 
அனைத்து செய்கைகளுக்கும் கடவுள் தான் காரணம் என்று கூறிவிட்டு, பூட்டை திறக்க சொல்வதும் கடவுள் தான் என்று மறுப்பது முரணாக உள்ளது... இப்படி நீங்கள் எது சொன்னாலும் உங்கள் ஆன்மீகத்திலேயே இதற்கு  முரணாக பதில் இருக்கிறது என்பதை மறந்து விடாமல் கொஞ்சம் சீரியசாக பேசுங்கள்...
உங்கள் பேச்சு காமெடியாக எடுத்துக் கொண்டால் உங்கள் பொழப்பு சிரிப்பாய் சிரிச்சுடும் என்பது தான் உண்மை..

இதற்கு உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

இந்து நாளிதழில் இந்த செய்தியை படித்தவுடன் வந்த கோபம் அந்த செய்திக்கு பின்னூட்டம் எழுதிய அனைவரின் பதிலையும் படித்தவுடன் அணைந்து போனது.. அனைவரும் அந்த ஜோசியக்காரர்களை திட்டி தீர்த்து இருக்கிறார்கள்... 

11.8.11

எழுச்சிக்கான அறிகுறிகள்..

அரசை பார்த்து மக்கள் அச்சப் படக் கூடாது, அரசு தான் மக்களை பார்த்து அச்சப் படவேண்டும்..

People Should not be afraid of their Government, Government should be afraid of their People


இன்று காலை இந்த வலைப் பதிவை படித்ததும், இது எதோ இங்கிலாந்து நாட்டு பிரச்சினை மட்டும் அல்ல நம் இந்தியாவிலும் புகைந்து கொண்டிருக்கும் செயலாக தான் பார்க்கிறேன்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் எழுச்சியும், உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் எழுச்சியும், மற்றும் போராடும் பிற வர்க்க பிரதிநிதிகள் மேல் அரசின் இரும்பு கர அடக்குமுறை என்பது மக்கள் எழுச்சி மீது இந்த அரசு எவ்வளவு பயம் கொண்டுள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது...

போராட்டத்தை ஒடுக்க இந்த அரசானது பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது...

போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு...
போராட்டம் நடத்துபவர்கள் மீது களங்கம் கற்பித்தல்..
போராட்டம் செய்ய நினைப்பவர்களை மிரட்டுதல்...
போராடினால் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்...
மற்றும்
ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்க அனைவரிடமும் ஊழலை பரவ செய்தல்..

ஒரு வைரஸ் கிருமி போல் ஊழல் பரவி கொண்டிருக்கிறது,
ஊழலை கண்டுகொள்ளாமல் செல்லும் பாங்கை இந்த அரசு வளர்த்து வருகிறது..
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து எப்படி ஸ்தம்பித்து இருக்கிறதோ அது போல் இந்தியாவும் மாறும் என்பதில் ஐயப் பாடில்லை..

ஆனால் அது வெகு காலம் ஆகுமா அல்லது ஆன்மீகத்தின் துணையுடன் அந்த தீ அணைக்கப் படுமா என்பது தான் கேள்வியே!

எது எப்படியோ மக்கள் எழுச்சி பெற்று விடுவார்களோ என்ற பயம் அரசின் எண்ணத்தில் வந்து விட்டதே, மக்கள் மனதில் எழுச்சிக்கான ஆவல் பிறந்து விட்டதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்கிறேன்...

9.8.11

தள்ளி வைக்கப் பட்டுள்ள சந்தோசம்..

எழுபது நாட்கள் நடந்த நாடகம் உச்ச கட்டத்தை நெருங்கி தமிழகமே மற்ற அனைத்து கவலைகளையும் தள்ளி வைத்து விட்டு ஆனந்தத்தில் கொண்டாடி கொண்டிருக்கிறது..

கலைஞர் நிறைவேற்றிய சட்டத்தில் இருக்கும் ஓட்டையை அம்மா கவனிப்பதற்கு இத்தனை நாளாகியிருப்பது அவரது அரசின் நிர்வாக சீர்கேட்டை சுட்டி காட்டுகிறது..

எல்லோரும் சரி சமமான கல்வியை பெறப் போகிறார்கள் என்று ஆனந்தம் கொண்டிருக்கும் வேளையில் மிகவும் அமைதியாக, தனியார் பள்ளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனியார் புத்தகங்களின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது அரசு... 

உச்ச நீதிமன்றம் இதோ அதோ என்று சொல்லி ஒரு வழியாக சட்டத்தில் இருக்கும் ஓட்டையை அம்மாவுக்கு காட்டி விட்டார்கள் போல் தெரிகிறது...

இன்னும் வீண் பிடிவாதம் பிடிக்காமல் அனைத்து மாணவர்க்கும் ஒரே புத்தகமாக தந்து நீதியை நிலை நாட்டப் போகிறார்களா? அல்லது தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கு துணை நிற்க தனியார் நிறுவனங்களின் புத்தகத்தையும் பரிந்துரைக்க போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்பது என்று என் சந்தோசத்தை பத்து நாட்களுக்கு தள்ளி வைக்கிறேன்..

சமச்சீர் கல்வி சட்டம் 

2,3,4,5,7,8,9,10 வகுப்புகளுக்கான புத்தகங்களின் அட்டவணை..

1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களின் அட்டவணை..

மார்க்சிஸ்டுகளுக்கு...

இந்த கட்டுரை மார்க்சிஸ்டுகளுக்கு மட்டுமே, மார்க்சிஸ்ட் என்ற பெயரில் மார்க்சை அணு அளவுக்கு கூட தெரியாதவர்களுக்கு அல்ல....

இந்திய அரசாங்கம் தன் சந்தையை பெருக்கிக் கொள்ளவே இலங்கை அரசுடன் நேற்றும் இன்றும் ஒப்பந்தம் போட்டு ஈழ தமிழனின் முதுகில் குத்திக் கொண்டிருக்கிறார்கள்...
அதற்கு விடை தேடாமல் , அந்த பிரச்சினையை வைத்து இந்திய அளவிலும் மாநில அளவிலும் பிணந்தின்னி கூட்டம் போல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் பலர்...

தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று வாய் கிழிய கூவும் அனைவரும் நாடு கடத்தப் பட்ட ஈழ அரசை இந்திய மண்ணில் நிறுவுவதற்கு ஏன் ஒரு சத்தம் கூட போடாமல் அமைதி காக்கின்றனர்..

போராட்டம் என்பது இடத்திற்கு இடம் மாறும் என்பது மார்க்சிய கொள்கை..
நாங்கள் என்ன ஆயுதம் தாங்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான் என்பது மாவோ கொள்கை..
மற்ற அனைத்து நாடுகளின் பிரச்சினைகளிலும் மேற்கூறிய வசனத்தை கூறி அமைதி காக்கும் பொதுவுடைமை கட்சிகள் ஏன் ஈழம் என்று வரும் பொழுது மட்டும் ஆயுதம் தாங்குவது தவறு என்று கூற வேண்டும்...

ஒரு மாநிலத்தை அரசாண்டுக் கொண்டிருக்கும் பொழுதே, காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொழுதே உங்கள் எதிரிகளான மாவோ இஸ்ட்களை சமாளிக்க பொது மக்கள் கையில் ஆயுதம் கொடுப்போம் என்று பேசியது சரி என்றால், தன் உயிரை காத்துக் கொள்ள சக தமிழன் ஆயுதம் தாங்கியது என்பது எந்த விதத்தில் தவறு..

ஈழப் பிரச்சினை நிறம் மாறி ஆண்டுகள் பல ஆகிவிட்டது...
அந்த நிறம் மாறாமல் தடுக்க வேண்டிய கடமை பொதுவுடைமை கட்சிகளுக்கு உள்ளது, அதை விட்டு விட்டு உள்ளூர் அரசியலை கருத்தில் கொண்டு வேஷம் போடும் போலி பொதுவுடைமை வாதிகளால் பொதுவுடைமை கட்சி சிதைந்து வருகிறது...

பொதுவுடைமை கட்சி தேய்ந்து வருவதால் பொதுவுடைமை சிந்தனை உள்ள யாருக்கும் ஆனந்தம் தருவதில்லை, மாறாக ஆத்திரத்தை தான் தருகிறது... அந்த ஆத்திரம் ஏளனமாக வெளிப்படுகிறது...
மற்றவர்களின் விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் முன் கொஞ்சம் யோசியுங்கள், நியாயம் இருந்தால் தட்டி கொடுங்கள் இல்லை என்றால் தட்டிக் கேளுங்கள்... அது தான் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு..

-உங்கள் கட்சி ஏன் நாடுகடத்தப் பட்ட தமிழ் ஈழம் அமைக்க குரல் கொடுக்கவில்லை என்று யோசித்து பாருங்கள்.. 

-சீனாவிற்கு எதிராய் அமைந்துள்ள திபெத் தின் நாடு கடத்தப் பட்ட அரசுக்கு எதிராய் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று யோசித்து பாருங்கள்.. அது சரி என்றால் நாடு கடத்தப் பட்ட ஈழ அரசு சரியானது தானே... 

-தமிழகத்தில் உள்ள அகதிகளின் நிலை குறித்து ச.தமிழ் செல்வன் போன்ற தோழர்கள் கருத்து கூறிய பிறகும் அது ஏன் கருத்துக் களத்தில் இணையவில்லை என்று கேள்வி கேளுங்கள்?

-பொதுவுடைமை ஊடகங்கள், உங்கள் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடுகள் ஏன் இதை ஊதி பெரிதாக்கவில்லை என்று கேளுங்கள்?

- கடைசியாக, ஒவ்வொரு தேர்தலிலும் முதலாளித்துவ கட்சிகளுக்கு காவடி தூக்க வேண்டிய கட்டாயம் ஏன் பொதுவுடைமை கட்சிகளுக்கு வந்தது என்று கேள்வி கேளுங்கள்?

-தேர்தல் என்பது போலியானது என்று கூறும் உங்கள் கட்சி ஏன் ஒரு தேர்தல் தோல்வியை இந்த அளவுக்கு பெரிய தோல்வியாக கருதி கருத்து கேட்க வேண்டும் என்று யோசியுங்கள்?

-சரியான பதில் கிடைத்தால் நீங்களும் உங்கள் கட்சியை கேள்வி கேட்பீர்கள், இல்லை என்றால் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எங்களை கேள்வி கேட்டுக் கொண்டு இருங்கள்?


8.8.11

அறியாமை போர்வை விலக..

பொதுவுடைமை கட்சியினர் மீது ஜால்ரா அடிக்கும் தன்மையை கேள்வி கேட்டால் ஊடகங்கள் சரியான செய்திகளை வெளியிடுவதில்லை என்று பூசி மெழுகி விடுவார்கள்... இது தொண்டர்களை சமாதானப்படுத்த இவர்கள் தயாராக வைத்திருக்கும் பதில்... 

எது எப்படியோ... 

தோழர்.காரத் கொடுத்த பேட்டி ஒன்றில் நமது மரியாதைக்குறிய(?) பிரதமர் மேல் நேரடியாக குற்றம் சாட்ட முடியாதென்றும், அவர் ஊழல்கள் நடக்கும் பொழுது வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது தான் குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்... கே ஜி எரிவாயு படுக்கை ஊழலும், இஸ்ரோ ஊழலும் பிரதமர் நேரடியாக கலந்திருப்பது அவரது நம்பகத்தன்மையை தெளிவாக உடைத்து எரிகிறது.. அப்படி இருந்தும் அவரது நம்பகத்தன்மையை கேள்வி கேட்க முடியாது என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது ஆகும்...

பொதுவுடைமை சிந்தனை படி ஊழலை ஊக்குவிப்பதே முதலாளித்துவம் தான், முதலாளித்துவ சித்தாந்தம் உள்ள ஒரு அரசு ஊழலின் அடிப்படையில் தான் அமைகிறது என்பது மார்க்சிய தத்துவம்.. அப்படிப்பட்ட சூழலை உடைத்து வெளியிடாமல் மூக்கை தொடுவது, வங்காளத்தில் மீண்டும் அக்கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது... வங்காளம் என்று குறுகிய நோக்கில் தான் இவர்கள் பார்வையும் இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது... 

குஜராத் என்று குறுகிய நோக்கு பார்வையுடன் முன்னேறிய பா.ஜ.க வினர் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை இழந்து கொண்டு வருகின்றனர்... ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் மட்டுமே வலுவாக உள்ள பொதுவுடைமை கட்சியினர் இத்தகைய நடவடிக்கையால் அங்கேயே முடங்கி கொள்ள போகிறார்கள் என்பது தெரிகிறது.. 

காரத்தின் பேட்டியில் நான் தேடியது எங்காவது டாடாவையும் அம்பானியையும் இவர் சந்திக்கு இழுத்திருக்கிறாரா என்பது தான்... வங்காள அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் நடுவில் போடப் பட்ட ஒப்பந்தமே வெளிப்படையாக தெரிவிக்காதவர்கள், பெரிய நிறுவனங்களை சந்திக்கு இழுப்பார்கள் என்பது சாத்தியம் அல்ல என்பது தெரிகிறது..

பொதுவுடைமை என்ற போர்வையில் முதலாளித்துவம் உறங்கி கொண்டிருப்பது தெளிவாகிறது... இதை எதிர் கொள்ள அனைவரும் சற்று பொதுவுடைமை கொள்கைகளை பற்றி சிறிதளவேனும் தெரிந்து கொண்டால் நம் மீது படர்ந்திருக்கும் அறியாமை போர்வை விலகி விடும்....

7.8.11

கீச்சு #1

தெரியாது என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது என்பவர்களிடம்

தேடப்படும் குற்றவாளியான டக்ளசை கைது செய்யாதது ஏன்? - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..

நல்லா கேக்கிராங்கய்யா டீடைலு...



என் மொக்கை கீச்சுகளை படிக்க http://twitter.com/#!/suryajeevaa 


6.8.11

இருளில் மூழ்கிய ஊடகம்...

அன்னை, இந்தியாவை விட்டு பறந்து சென்று அயல் நாட்டில் சிகிச்சை எடுக்க சென்றது, உடனடியாக யார் கவனத்துக்கும் வரவில்லை... காங்கிரஸ் கட்சியினரே முன்வந்து அவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றும், அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்து விட்டது என்றும், இன்னும் முடியவில்லை நாளை அல்லது அடுத்த நாள் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்றும் குழப்பி குழப்பி சிதறடித்த பிறகும் இன்னும் தெளியவில்லை ஊடகம்...

நேற்று அம்மா வானத்தில் பறந்து குப்பை தொட்டிகளை பார்வையிட்டதும், உடனடியாக கவனத்துக்கு வராமல் முதல்வர் அலுவலகமே தகவல் கொடுத்து தெரிந்து கொண்டாலும் இன்னும் அடங்காத கேள்விகள் எவ்வளவோ...

முதல் முறையாக இந்திய வரலாற்றிலேயே நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியை அப்படியே எழுதியதற்காக PTI மீது அமைச்சர் வழக்கு தொடர்ந்ததும் நடந்து உள்ளது...

தமிழகத்தில் மண்ணெண்ணெய் விலை உயர்ந்திருப்பதை சுட்டி காட்டவும் தவறி விட்டது ஊடகம்.. ஒரு வேலை எந்த ஊடகத்தை சேர்ந்தவர்களும் மண்ணெண்ணெய் வாங்குவதில்லையோ?

முன்பெல்லாம் துப்பறியும் ஊடகம் என்ற பெயரில் கலக்கி கொண்டிருந்த ஊடகம், இப்பொழுதெல்லாம் அந்த வேலையை லோக் ஆயுக்தாவிடமும், CAG குழுவினரிடமும் அந்த வேலையே விட்டு விட்டார்கள் போல... ஹிந்து நாளிதழ் சில நாட்கள் மும்முரமாய் வெளியிட்ட விகிலீக்ஸ் பக்கங்களும் பேச்சு மூச்சின்றி கிடக்கின்றது... 

பல செய்தி தாள்களை படித்து, பல ஊடகங்களை பார்த்து தன் வேலை பளுவுக்கும் நடுவில் பலர் அரசியல் செய்திகளை வலைப்பூவில் பதிவு செய்து கொண்டு தான் வருகின்றனர்.. அதையும் நீர்த்து போக செய்ய புது சட்டம் தயார் நிலையில் உள்ளது... மேலும் தவறான செய்திகளும் இதனுடன் இணைந்து தவறான செய்திகளும் இணைந்தே வருகின்றது... அதுவும் வலைபூக்களின் நம்பகத்தன்மையை சோதித்து பார்க்கின்றது...

வெளிச்சத்தில் வருமா ஊடகங்கள், பொறுத்திருந்து பார்ப்போம்...

5.8.11

ஒரே குட்டையில்...

கொள்கைகள்; 
முதலாளித்துவம் சார்ந்தது...

மத சார்பற்றது இல்லாதது ...

மக்களை பற்றி கவலைபடாமல் கவலைப்படுவது போல் நடிப்பது...

ஊழலில் திளைப்பது..

அமெரிக்காவுக்கு காவடி தூக்குவது..

இது எந்த கட்சிக்கு பொருந்தும் என்று கேட்டால், கண்ணை மூடி கொண்டு சொல்லலாம்...

காங்கிரஸ் உம், பா.ஜ.க வும்...

அப்படி பட்டவர்கள் மக்களின் முதுகில் குத்துவது கைப்புண் போல் தெரியும் பொழுது எதற்கு கண்ணாடியை தேடி கொண்டிருக்கிறார்கள் மற்ற கட்சிகள்...
பொதுவுடமைவாதிகளை பிரித்தாளும் கட்சிகளில் உள்ள பொதுவுடைமை வாதிகள் தங்கள் கொள்கைகளை சீர்தூக்கி பார்த்து ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு கொள்ளாமல் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது.. முதலாளித்துவம் கை கோர்த்து பலம் கொள்ளும் பொழுது பொதுவுடைமை சிதறி திரிவது அதன் சொற்ப பலமும் கூடி விடுவதற்கு உதவி தான் புரியும் ...

நான் காண்பது கனவா, இல்லை நனவாகுமா என்பது உங்கள் கைகளில் உள்ளது.. அது வரை நம்பிக்கையுடன் தொடரும் என் பயணம்...

4.8.11

படிச்சிட்டு யோசிக்காதீங்க?

மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுக்க யோசிக்கும் அரசு, மடிக் கணினியை தருவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.. 

புத்தகங்கள் இல்லாமல் கூட மாணவர்கள் இருக்கலாம் ஆனால் மடிக் கணினி இல்லாமல் இருக்கக் கூடாது என்ற எண்ணம் வரவேற்கத்தக்கதே?

ஜூலை மாதம் 11ஆம் தேதி வெளிவந்த செய்திப்படி ஒரு மடிக் கணினிக்கு மதிப்பு 15000 ரூபாய் என்று கூறப் பட்டது..
ஆனால் 9.12 லட்சம் மடிக் கணினிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தொகை 912 கோடி ருபாய் ஆகும். அதன்படி பார்த்தால் ஒரு மடிக்கணினிக்கு ஒதுக்கப் பட்டுள்ள தொகை 10000 ரூபாய்... ஒரு வேளை மீதி தொகையை அடுத்த வருஷம் ஒதுக்குவாங்களோ?

இப்படி எல்லாம் கூத்து தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.. [அநேகமாக பல பேருக்கு வந்திருக்கும்]

சும்மா இருந்து வீட்டில் பார்ப்பதற்காக இலவசமாய் டி.வி. கொடுக்கும் அரசு ஏன் உயிர் காக்கும் ஹெல்மெட்டை இலவசமாக கொடுக்க கூடாது?


மேலே உள்ள இணைப்பிலேயே ஜூலை மாதம் டெண்டர் விட்ட செய்தியும் அதற்கு கீழேயே உள்ளது...

3.8.11

ஓ போடு...

யஸ்வந்த் சின்ஹா வின் பொன்மொழிகளுக்கு...

"நான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பொழுது, பல வெளிநாடுகளுக்கு சென்றேன். 
என் புகைப்படம் பல இதழ்களில் வெளி வந்தது. 

ஆனால் ஓட்டு சேகரிப்பதற்காக என் தொகுதியில் ஒரு குக்கிராமத்திற்கு சென்றிருந்த பொழுது, ஒரு மூதாட்டி 
என்னிடம், "மண்ணெண்ணெய் விலை என்ன?" என்று கேட்டார்.. 

என்னிடம் அதற்கான விடை இல்லை. 

நாங்கள் அந்த தேர்தலில் தோற்றுப் போனோம். 

அதே நிலைமை உங்களுக்கும் வரும்..."

நாடாளுமன்றத்தில் மேற்கூறியபடி பேசி 
தவறை ஒத்துக் கொண்ட மன தைரியத்துக்கு தான் ஓ..

அதே போல் உங்கள் கட்சி செய்துள்ள அனைத்து தப்புகளையும்  ஒத்துக் கொண்டால் ஓஹோ...